விமானம் தாங்கிகளுக்கான போர் விமான கொள்முதல் டெண்டரை வெளியிட்டது இந்திய கப்பற்படை

தேஜாசின் கப்பல் படை மாதிரியை நிராகரித்த கப்பல் படை, தற்போது வெளிநாட்டிலிருந்து புதிய விமானங்கள் வாங்கும் டெண்டரை வெளியிட்டுள்ளது. இந்த டெண்டரில் 57 புதிய விமானங்கள் வாங்கப்படும் என்று அறிவித்துள்ளது கப்பற்படை. இவை விமானம்தாங்கியிலிருந்து செலுத்துமாறும் பன்முக திறனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. இருந்தாலும் இந்த ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற்று விமானங்கள் இந்தியா வர குறைந்தது பத்து ஆண்டுகள் ஆகும் என்று தெரிகிறது.

இந்த புதிய போர் விமானங்கள் நவீன போர்க்களத்தில் சண்டையிட தகுதியுடையதாகவும்,  வான் பாதுகாப்பு, தரை இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன், எதிரி கப்பல்களை அழிக்கும் திறன், மற்ற போர் விமானங்களுக்கு வானிலே எரிபொருள் நிரப்பும் திறன், உளவு பார்க்கும் திறன் மற்றும் மின்னணு தாக்கும் திறன் போன்ற பன்முக தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்று அந்த டெண்டரில் கூறியுள்ளது.

அதோடு, விமானத்தில் எத்தனை எஞ்சின்கள் இருக்கவேண்டும் என்று சரியாக குறிப்பிடாமல், ஒரே ஒரு எஞ்சினுடன் பல வேலைகளை செய்ய முடியுமா என்று கேட்டுள்ளது. இதன் மூலம் இரட்டை எஞ்சின் கொண்ட விமானத்தையே எதிர்பார்ப்பதாக தெரிகிறது.

மேலும் விமானம், சாதாரண ஸ்கை ஜம்ப் விமானம்தாங்கிகளிலிருந்து செலுத்த முடியுமா என்றும் கேட்டுள்ளது. அதோடு நவீன CATOBAR மற்றும் EMAL  மூலமும் செலுத்த முடியுமா என்று வேடிக்கையாகவும் கேட்டுள்ளது. பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தங்கள் CATOBAR  விமானத்தை மாறுதல் செய்து ஸ்கை ஜம்ப் மூலம் செலுத்த முடியும் என்று கூறியுள்ளது, ஆனாலும் அவ்வாறு செய்யும் போது விமானத்தின் திறன் வெகுவாக குறையும் என்றும் கூறியுள்ளது.

இந்திய கப்பல் படை சுமார் 45 MiG 29K விமானங்களை  பயன்படுத்தி வருகிறது, இவை இரண்டு ஸ்குவாடுகளாக  பிரிக்கப்பட்டு விக்ரமாதித்யா கப்பலிலும், கப்பல் படை விமான தளத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கட்டி முடிக்கப்பட்டு 2023 வாக்கில் களத்திற்கு வரும் விக்ராந்த் கப்பலுக்கும் இது போன்ற விமானங்கள் தேவைப்படுகிறது, அதோடு விஷால் என்ற பெயரில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள கப்பலுக்கும் போர் விமானங்கள் தேவைப்படுகிறது.

MiG 29K விமானத்தில் அடிக்கடி கோளாறுகள் வருவதாக கப்பல் படை பல முறை கூறி வந்தது, அதோடு அதன் திறனும் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும் கப்பல் படை கூறி வந்தது. சிக்கல் என்னவென்றால் விக்ரமாதித்யா மற்றும் விக்ராந்த் கப்பல்கள் ஸ்கை ஜம்ப் மூலம் விமானத்தை செலுத்துமாறு வடிவமைக்கப்பட்டவை. இவை இரண்டுமே தலா 24 விமானங்களை எடுத்து செல்லும். ஸ்கை ஜம்ப் மூலம் செலுத்தப்படும் போது ஏற்கனவே கூறியது போல விமானத்தின் திறன் வெகுவாக பாதிக்கப்படும், குறிப்பாக தாக்கும் தூரம் மற்றும் எடுத்து செல்லும் ஆயுதங்களின் அளவு.

அதனால் தான் விஷால் கப்பலை பெரிதாக வடிவமைத்து நவீன மின்காந்த அமைப்பு மூலம் விமானங்களை செலுத்த திட்டமிட்டு அதற்கான வேலைகளை செய்து வருகிறது கப்பல் படை. இதன் மூலம் கன ரக விமானங்களை ஏவுவது மட்டுமின்றி, அதன் மொத்த திறனையும் போர்க்களத்தில் காட்ட இயலும்.

அதோடு 2030-க்கு பிறகே களத்திற்கு வரும் விஷால் கப்பலில் 5-ம் தலை முறை போர் விமானங்களை நிலை நிறுத்துவதே நல்லது. ஆனால் தற்போதைய டெண்டரில் அது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை, டெண்டர் குறிப்பிட்டுள்ளபடி நடுத்தர ரக பல் திறன் விமானங்களை தான் கப்பல் படை விரும்புவது தெரிகிறது.

விக்ராந்த் கப்பலில் ரபேல் போர் விமானங்களை நிலை நிறுத்த கப்பல் படை பல முறை பரிந்துரைத்துள்ளது. ஆக இந்த புதிய டெண்டர் விக்ராந்த் கப்பலுக்கு மட்டும் தான் என்று ஓரளவிற்கு தெளிவாகிறது. இருந்தாலும் 57  போர் விமானங்கள் வாங்குவது சிறிது சந்தேகத்தை எழுப்புகிறது.

இந்த டெண்டர் போர் விமானங்களை இந்தியாவில் தயாரிக்க உதவி செய்யுமாறும், அதோடு ஒப்பந்த தொகையில் 30% இந்தியாவில் முதலீடு செய்யவும் கூறியுள்ளது.

எவ்வாறாகினும் கப்பல்படையின் திட்டம் ஓரளவு யூகிக்குமாறு உள்ளது. அதாவது விக்ரமாதித்யா கப்பலில் MiG 29K  விமானமும், விக்ராந்த் கப்பலில் ரபேல் அல்லது F 18 விமானமும், விஷால் கப்பலில் F 35/Rafale/F 18 ASH விமானங்களையும் நிலை நிறுத்தும் என்று தெரிகிறது. இதில் பிரச்னை என்னவென்றால் மூன்று வித்தியாசமான போர் விமானங்களை இயக்குவது மிக கடினமாக இருக்கும், அதிலும் முக்கியமாக தளவாடங்கள், பயிற்சி முறை, மற்றும் ஆயுதங்கள்.