20 உயிர்கள், கேள்விக்குறியான ராணுவ தளத்தின் பாதுகாப்பு

எல்லைக் கட்டுப்பாடு கோட்டிலிருந்து வெறும் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்திய ராணுவத்தின் ஒரு ராணுவ தளம், எப்போதுமே பரபரப்பாக இருக்கும் யூரி பகுதி தான், எவ்வித போரோ சிறு சண்டையோ வந்தாலும் முதலில் செயல்படும் பிரிவு இந்த முன்னணி ராணுவ தளங்கள் தான், எப்போதுமே குறைந்தது 2000 வீரர்களுடனேயே இந்த தளங்கள் இருக்கும், அதோடு ஆயுதங்கள் மற்றும் தேவையான அனைத்துமே இதில் இருக்கும், அங்கு புகுந்து தீவிரவாதிகள் தாக்கியதில் சுமார் 20 வீரர்கள் உயிரிழந்ததோடு, 20 பேர் படுகாயமுமடைந்தனர்.

ராணுவ தளத்தின் பாதுகாப்பு குறைபாடே இதற்கு முக்கிய காரணம், இரு நாட்களுக்கு முன்பு தான் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாகவும், வட மேற்கு எல்லை பகுதியில் உள்ள ராணுவ நிலைகள் பாதுகாப்பாக இருக்கும்படியும் உளவுத்துறை அறிக்கை அனுப்பியது, ஏன் சாதாரண செய்தி தாள்களில் கூட இது வந்தது, இருப்பினும் இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்துள்ளது ராணுவம்.

வெளியான செய்திகளில், இந்த தளத்தில் சுமார் 2 பட்டாலியன் வீரர்கள் ( தோக்ரா மற்றும் பீஹார் ) இருந்ததாக தெரிகிறது. இரண்டு பட்டாலியனில் குறைந்தது 2000 வீரர்களுக்கு மேல் இருப்பார்கள், இங்கிருந்துதான் எல்லை பகுதியில் உள்ள கண்காணிப்பு நிலைகளுக்கு வீரர்கள் சுழற்சி முறையில் பணிக்கு செல்வார்கள். மேலும் தள பாதுகாப்பிற்கு எப்போதுமே ஒரு குழு காவல் இருக்கும்.

உளவுத் துறையின் எச்சரிக்கை கிடைத்தும் தளத்தின் பாதுகாப்பை அதிகரிக்காததே இந்த உயிரிழப்புக்கு முக்கிய காரணம், மேலும் சாதாரண பாதுகாப்பு வசதிகள் கூட ஒரு முக்கிய ராணுவ தளத்திற்கு இல்லாததும் மிகப் பெரும் இழப்பே, பதான்கோட் விமான தளத்தில் தீவிரவாதிகள் புகுந்த போதும் அங்கு நிலவிய பாதுகாப்பு குறைபாடே பெரும் இழப்பை ஏற்படுத்தியது, அதன் பிறகே விமான தளங்களை பாதுகாக்க அமைச்சகம் முடிவெடுத்தது. இருப்பினும் எவ்வித நிதியோ ஒப்பந்தமோ இதுவரை போடப்படாதது ஆச்சர்யம் அளிக்கிறது.

அதிகாலை சுமார் 5.30 மணி அளவில் நான்கு பேர் அல்லது அதற்கு மேற்பட்ட ஒரு தீவிரவாத கும்பல் தளத்தின் பின் பகுதியிலிருந்து தாக்கத் துவங்கியது, அதிகாலை நேரத்தில் பெரிய டீசல் டாங்கிலிருந்து சிறிய பேரல்களில் டீசலை பிடித்துக்கொண்டிருந்தது ஒரு ராணுவக் குழு, வெறும் மூன்று நிமிட நேரத்திற்குள்ளால் 17 கையெறி குண்டுகளை அந்த டீசல் டாங்கியின் மீது வீசினர் தீவிரவாதிகள். டாங்கி வெடித்ததோடு மட்டுமல்லாமல் அருகில் அமைக்கப்பட்டிருந்த சிறிய தற்காலிக டென்டில் மீதும் பரவியது, அதனால் டென்டில் இருந்த மற்றும் டீசல் பிடித்துக்கொண்டிருந்த சுமார் 13 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பின்பு தீவிரவாதிகள் வீரர்கள் தங்கும் கட்டடத்துக்குள் செல்ல முயன்ற போது, அங்கு காவலுக்கு இருந்த ஒரே ஒரு வீரரால் எதிர்க்கப்பட்டனர். 19 வயதே ஆன அந்த வீரர் ஒரு தீவிரவாதியைக் கொன்றார். தீவிரவாதிகள் திருப்பி தாக்கியதில் படுகாயமுற்று தற்போது ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்பு தீவிரவாதிகள் வீரர்கள் தங்கும் கட்டடத்துக்குள் சென்று பதுங்கி கொண்டனர்.

பிரச்னை எல்லை மீறி விட்டதை அறிந்த தள கமாண்டர், உதவிக்கு சிறப்புப் படையை அழைத்தார், ராணுவத்தின் 4-வது பாரா கமாண்டோ படைகள், ராணுவத்தின் துருவ் ஹெலிகாப்டரிலிருந்து தீவிரவாதிகள் பதுங்கிய கட்டடத்திற்கு அருகே குதித்தனர். வெறும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்குள் கட்டடத்தில் பதுங்கிய அனைத்து தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர் பாரா கமாண்டோக்கள், வீரர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. தீவிரவாதிகள் யாரேனும் தப்பித்தாரா என்று அருகில் உள்ள பகுதிகளில் ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.

சாதாரணமாக மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒரு ராணுவ தளத்தில் சாதாரண கண்காணிப்போ, அல்லது காவல் வீரர்களோ சரியாக செயல்படாதது மிகுந்த கவலை தருகிறது. உலகின் எல்லா நாடுகளுமே தங்களது ராணுவ தளங்களை மிக சிறந்த பாதுகாப்பு வளையத்திற்குள்ளேயே வைத்திருக்கும். பதான்கோட் சம்பவம் நடந்து எட்டு மாத இடை வெளியில் மற்றொரு மிகப் பெரிய தாக்குதல் நடந்துள்ளது வேதனையே, தளத்திற்கு உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யாமல் டாங்கிகளையும் ஏவுகணைகளையும் வாங்கி என்ன பயன். வெறும் 5 கோடி ரூபாயில் ஒவ்வொரு ராணுவ தளத்தையும் உச்ச பட்ச பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வர முடியும்.

அது மட்டுமல்லாது, வீரர்களின் தாக்கும் திறனில் கூட சந்தேகம் எழுந்துள்ளது, இந்த தாக்குதலுக்கு ஏன் பாரா கமாண்டோக்கள் வரவழைக்கப்பட்டனர். தளத்தில் உள்ள வீரர்கள் மட்டுமே இதை முடிக்க முடியாதா என்றும் கேள்வி எழுந்துள்ளது. உலகிலேயே உயிரை துச்சமென மதித்து முன்னேறிய இடத்திலிருந்து பின்வாங்காத இரு ராணுவம் ஒன்று இந்தியா மற்றொன்று அமெரிக்கா, உலகின் தலை சிறந்த ராணுவமான இஸ்ரேல் கூட பின்வாங்கிய தகவல்கள் உள்ளது, பின்வாங்கிவிட்டு மீண்டும் இழந்த இடத்தை பிடித்தனர், அது வேறு கதை

1962 போரில், சீனாவிடம் தோற்கும் என்று தெரிந்தும் பின்வாங்காத ராணுவப்படையை கண்டு ஆச்சர்யப்பட்டது அமெரிக்கா, இதை அன்றைய அமெரிக்கா தூதர் கால்பரைத் ஆச்சர்யத்துடன் வெளிப்படுத்தியிருந்தார் . உயிரைப் பற்றி கவலைப்படாமல் தான் இருக்கும் இடத்தை விட்டுக் கொடுக்காத முன்னணி ராணுவத்தின் தாக்கும் திறன் கேள்விக்குள்ளாவது மிகுந்த வேதனையே.

இந்த வருட துவக்கத்தில் ஈராக் சிரிய எல்லை அருகே சுமார் 90 வீரர்கள் அடங்கிய அமெரிக்கா சிறப்புப் படையின் தளத்தை சுமார் 300-க்கும் மேற்பட்ட ISIS தீவிரவாதிகள் தாக்கினர், ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் மோர்ட்டார் குண்டுகள் மூலம் தளம் கடுமையாக தாக்கப்பட்டது. இருப்பினும் ஒரு அமெரிக்க வீரன் கூட உயிரிழக்கவில்லை, அதோடு 200-க்கும் அதிகமான ISIS தீவிரவாதிகளைக் கொன்றது, மற்றவர்கள் தப்பியோடி விட்டனர். பின்பு இதுவரை ஒரு அமெரிக்கா ராணுவ தளத்தைக் கூட ISIS தீவிரவாதிகள் தாக்கியது கிடையாது.

அவர்களின் தளத்தையும் ஆயுதங்களையும் ஒப்பிடும் போது, இந்திய ராணுவத்தின் திறன் குறைவு தான், தளத்திற்கு ஒழுங்கான பாதுகாப்பு வசதிகள் கூட இல்லாதது, காவலுக்கு இருந்த வீரர்களின் மெத்தனம், எச்சரிக்கை விடுத்தும் உரிய கண்காணிப்பின்றி வெடிக்கும் பொருட்களைக் கையாண்டது, இது போன்ற குறைகள் இருந்ததாலேயே இவ்வளவு இழப்பு.

பதான்கோட் தாக்குதலிலேயாவது பாதுகாப்பு துறை பாடம் படிக்கும் என்று அனைவரும் நினைத்தனர், எட்டு மாதத்திற்குள் அடுத்த பேரிழப்பு, இன்னும் தள பாதுகாப்பிற்கு ஒரு முடிவுகள் கூட எடுக்கப்படாதது ஆச்சர்யம் தான், அரசு என்று தான் விழிக்குமோ, வாங்கி குவிக்கும் போர்க்கப்பல்கள் விமானங்கள் எதுவுமே பயன் தராது, தரைப் படை ஒழுங்காக செயல்படவில்லையெனில்.

முதலில் மற்ற திட்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டு ராணுவத்தை நவீனப் படுத்த அரசு முயற்சி எடுக்க வேண்டும், சமீபத்தில் வெள்ளோட்டம் விடப்பட்ட INS மொர்முகோ போர்க்கப்பலின் செலவு சுமார் 6800 கோடி ரூபாய், அவ்வளவு பணத்தில் காஷ்மீரில் உள்ள எல்லா ராணுவ தளத்தையும் புதுப்பித்து, வீரர்களுக்கு புது ஆயுதங்கள், கவச உடுப்புகள் வாங்க முடியும்.

போர் ஏற்படும் காலங்களை விட மற்ற நேரங்களில் இராணுவமே முன்னணியில் நின்று செயல்படும், ஆக முன்னுரிமைக் கொடுக்கப்பட வேண்டியது தரைப்படைக்கே அன்றி மற்றவருக்கு அல்ல. இந்த தள தாக்குதல் அடுத்த பாடம், இதிலாவது அரசும் பாதுகாப்பு துறையும் பாடம் படிக்குமா இல்லை, பதன்கோட் போல பேசியே காலத்தை தள்ளி திட்டங்களை காற்றில் பறக்க விடுமா.

உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீரர்களுக்கு கடவுள் சீக்கிரம் குணமளிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு : மேலே படத்திலிருப்பது போன்ற ஒரு ராணுவ தளம் தான் தாக்குதலுக்கு உள்ளானது, இது போல் தான் எல்லா தளங்களுமே உள்ளது