இந்தியாவிற்கு பேவ் பா ராடர்களை தர அமெரிக்கா விருப்பம்

இந்தியாவின் வான் பரப்பை கண்காணிக்க அதி நவீன பேவ் பா ராடர்களை விற்பனை செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது. தொலை தூரம் வரை வான் பரப்பை எவ்வித குறுக்கீடும் இன்றி இந்த ராடர்கள் கண்காணிக்கும். சுமார் 4 அல்லது 5 ராடர்கள் மூலம் மொத்த இந்திய மற்றும் அருகில் உள்ள பகுதிகளையும் கண்காணிக்க முடியும்.

இந்தியா தற்போது இஸ்ரேல் நாட்டால் வழங்கப்பட்ட ஸ்வாட் பிஷ் தொலை தூர ராடர்களையும் பின்பு இஸ்ரேலின் உதவியுடன் அதை மாறுதல் செய்து LRTR என்ற பெயருடன் மற்றுமொரு தொலை தூர ராடரையும் பயன்படுத்தி வருகிறது. இவற்றின் கண்காணிக்கும் தூரம் 1000 கிலோமீட்டருக்கும் மேல் இருக்கும், இருந்தாலும் இதன் உண்மையான கண்காணிக்கும் தொலைவு ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

இந்த பேவ் பாவின் கண்காணிக்கும் தூரம் 6000 கிலோ மீட்டருக்கும் மேல் என்று கணக்கிடப்பட்டுள்ளது, அந்தமான் தீவில் இதை நிலை நிறுத்தும் போது சீன கடல் பகுதியில் நடக்கும் மொத்த விஷயங்களையும் இந்தியா அறிந்து கொள்ள முடியும், மும்பை அருகே வைக்கும் போது பாகிஸ்தானின் மொத்த வான் பகுதியையும் இந்தியாவால் கண்காணிக்க இயலும்.

இருப்பினும், இந்த ராடர்களை வாங்க இந்தியா அமெரிக்காவுடன் CISMOA என்ற தகவல் தொடர்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். ஏற்கனவே LEMOA என்ற ராணுவ உதவி ஒப்பந்தம் இறுதி வடிவில் உள்ளது, இந்தியாவின் ராணுவ கட்டளைகளை ஒன்றிணைக்கும் வேலையையும் அமெரிக்காவை சேர்ந்த ரேத்தியான் நிறுவனம் தான் செய்து வருகிறது. இந்த வேலையும் CISMOA ஒப்பந்தம் கையெழுத்தானால்  தான் நிறைவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பேவ் பா ராடர்களை அமெரிக்கா இந்தியாவிற்கு மட்டுமே விற்க சம்மதம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவிற்கு எதிராக அமெரிக்காவுடன் கை கோர்த்து வரும் இந்தியாவிற்கு பல்வேறு நவீன ரக ராணுவ உபகரணங்களை அமெரிக்கா தர ஆயத்தமாக உள்ளது குறிப்பிடத் தக்கது.