லேசர் ஆயுதங்களை சோதனை செய்து வருகிறது இந்தியாவின் DRDO

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பின் துணை நிறுவனமான செஸ்- Centre for High Energy Systems and Sciences – CHESS, லேசர் ஆயுதங்களை தயாரித்து சோதனை செய்து வருவதாகவும் அதை ராணுவத்தினருக்கு கூடிய விரைவில் கொடுக்கவிருப்பதாகவும் கூறியுள்ளது, குறைந்த திறனுள்ள இந்த லேசர்கள் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கும் தீவிரவாதிகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.

10 கிலோ வாட் சக்தி கொண்ட இந்த லேசர் முக்கியமாக ஆளில்லா மிக சிறிய உளவு விமானங்களை அழிக்கவும், கண்ணி வெடிகளை பாதுகாப்பாக வெடிக்க செய்யவும், தீவிரவாதிகளின் கண்களைக் குருடாக்கவும், தேவையில்லாத கூட்டங்களை கலைக்கவும் அதிக அளவில் இது பயன்படுத்தப்படும்.

இந்த லேசரை ஹைதராபாத்தில் உள்ள செஸ்-ன் சோதனைக் கூடத்தில் ஏற்கனவே சோதனை செய்து விட்டதாகவும், மேலும் இந்த லேசரை ஹரியானாவில் உள்ள ஆயுத சோதனை தளத்தில் வைத்து ராணுவத்தின் முன்னிலையில் சோதனை செய்துள்ளதாகவும், சோதனையில் 800 மீட்டர் தொலைவில் உள்ள சிறிய இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாகவும் செஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014-ம் வருடம் இது குறித்த ஆராய்ச்சிக்கு 115 கோடி ருபாய் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது, தற்போது ஓரளவு முடிக்கப்பட்டுள்ள இந்த திட்டம், அடுத்த வருடம் செயல்பாட்டிற்கு தயாராக இருக்கும் என்றும் செஸ் தெரிவித்துள்ளது.

இது தவிர புது தில்லியிலுள்ள லேசர் அறிவியல் தொழில் நுட்ப மையம், 25 கிலோ வாட் திறனுள்ள லேசரை உருவாக்கி வருவதாகவும், இது ராணுவத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளது, இது முக்கியமாக எதிரிகளின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை 5 முதல் 7 கிலோமீட்டர் உயரத்தில் வைத்து தாக்கி அழிக்குமாறு வடிவமைக்கப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.