A 29 இலகு ரக தாக்கும் விமானங்களை இந்தியாவிற்கு விற்க பிரேசில் விருப்பம்

உலகின் தலை சிறந்த இலகு ரக தாக்கும் விமானமான பிரேசில் நாட்டு தயாரிப்பான A 29 சூப்பர்  டுகானோ விமானத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்ய ஆவலாக இருப்பதாகவும், வரும் மார்ச் மாதம் கோவாவில் நடைபெறவுள்ள ஆயுத கண்காட்சியில் இந்த விமானத்தை பார்வைக்கு வைக்கப் போவதாகவும் பிரேசில் விமான நிறுவனமான எம்பிராயெர் தெரிவித்துள்ளது.

இந்த விமானத்தை தரையில் உள்ள இலக்குகளை தாக்க மட்டுமன்றி போர் விமானிகளுக்கு மற்ற விமானங்களை ஓட்ட பயிற்சியும் கொடுக்கலாம், பத்து வருடத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விமானம் உலகின் பல்வேறு பகுதிகளில் நடை பெற்ற சண்டைகளில் ஈடுபட்டு வெற்றி  பெற்றுள்ளது.

உலகின் தலை சிறந்த விமானப் படையான அமெரிக்க விமானப் படை கூட இந்த விமானங்களை வாங்கி தான் பல்வேறு நாடுகளில் பணியாற்றும் தங்களது தரைப் படை வீரர்களுக்கு உதவியாக வானிலிருந்து தரை இலக்குகளை தாக்கி தரைப் படையின் பணியை எளிதாக்குகிறது. அமெரிக்காவின் தனியார் பாதுகாப்பு நிறுவனமான ப்ளாக் வாட்டர் கூட இந்த விமானத்தை பாதுகாப்பிற்காக பயன்படுத்துகிறது.

தாக்கும் ஹெலிகாப்டர்களுடன் ஒப்பிடும் போது, இவை மிகவும் வேகமானவை மற்றும் அதிக தூரம் பறக்கவும், அதிக அளவு ஆயுதங்களையும் எடுத்துக் செல்லும். ஹெலிகாப்டர்களுடன் ஒப்பிடும் போது இதன் கொள்முதல் விலையும், பயன்பாடு விலையும் மிக குறைவு, ஒரு மணி நேரம் இந்த விமானத்தில் பறக்க ஆகும் செலவு சுமார் $500 மட்டுமே.

இந்த விமானம் சுமார் 1500 கிலோ ஆயுதங்களுடன் சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தாக்குதல் நடத்தி விட்டு மீண்டும் தளத்திற்கே வரும், இதன் அடிப்படை வேகம் ஒரு மணி நேரத்திற்கு  சுமார் 500 கிலோமீட்டர் ஆகும். இதனால் தொடர்ந்து ஆறு மணி நேரம் ஒரே இடத்தில் பறந்து தகவல் சேகரிக்கவும் கண்காணிக்கவும் முடியும்.

இந்திய ராணுவத்திற்கு இது போன்ற விமானங்களில் தேவைப்பாடு மிக அதிகம், காஷ்மீர், நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் பாதித்த இடங்களில் இதை ராணுவத்தின் கீழ் உள்ள பிரிவுகளில் பறக்க விட்டு தரைப்படை வீரர்களுக்கு உதவ முடியும். இந்திய ராணுவத்தில் இது போன்ற விமானங்களின் தேவைப்பாடு 100-கும் மேல் இருக்கும்