GSAT-6A செயற்கைகோள் தொலைந்து போனதாக அறிவித்தது இஸ்ரோ

சமீபத்தில் இந்திய ராணுவ பயன்பாட்டுக்காக GSAT-6A செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. ராக்கெட் வெற்றிகரமாக செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தினாலும், செயற்கைகோள் பிரிந்து தனியாக அதிக உயரம் சென்றதும் அதனுடன் தகவல் மற்றும் கட்டுப்பாட்டை இழந்ததாக இஸ்ரோ அறிவித்தது. தொடர்ந்து செயற்கைகோளுடன் தொடர்பு ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்காததால் செயற்கைகோள் விண்ணில் தொலைந்து விட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ராணுவத்துக்கு இது பெரும் இழப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ராணுவம் நவீனமயமாக்கப்பட்டு வரும் வேளையில், அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும், தகவல் தொடர்பை எளிதாக்கவும், அதே நேரம் மிகுந்த பாதுகாப்பான தகவல் தொடர்பையும் வழங்கும் பொருட்டு செயற்கைகோள்கள் தேவைப்பட்டது.அதற்காகவே இந்த நவீன செயற்கைக்கோளை தயாரித்தது இஸ்ரோ.

ஏற்கனவே கப்பல் படைக்கு தனியான தகவல் தொடர்பு செயற்கை கோளை இஸ்ரோ தயாரித்து கொடுத்துள்ளது, ராணுவமும் விமானப்படையுமே பாக்கி தற்போது.

GSAT-6A செயற்கைகோள் இரண்டு அலை வரிசைகளில் பல தகவல் சமிக்ஜைகளை ஒரே நேரத்தில் அனுப்பவும் பெறவும் செய்யும். அதோடு அதிக எடை உள்ள தகவல்களையும் அதே நேரத்தில் மிக தொலைவில் உள்ள இலக்குக்கு அனுப்பவும் செய்யும். சுருக்கமாக சொன்னால்

ஒரு ராணுவ குழு எல்லை தாண்டி இலக்கை தாக்க சென்றுள்ளது என்று வைத்துக்கொள்வோம், எதிரி நாட்டுக்குள் செல்லும் போது அங்கிருந்து தகவல் தொடர்பு கொள்ள சாதாரண ரேடியோக்களையோ வயர்லெஸ் கருவிகளையோ பயன்படுத்த முடியாது, காரணம் அவைகளை எதிரிகளால் எளிதில் இடை மறிக்கப்பட்டு தகவல்கள் திருடப்படும் அல்லது அந்த இடங்களில் ரேடியோ மற்றும் வயர்லெஸ் கருவிகள் செயல்படாமல் செய்யும் ஜாமர் கருவிகளை அங்கு வைத்திருக்கும்.

இதனால் எதிரி நாட்டுக்குள் சென்று தாக்கும் வீரர்களுக்கு மேலதிக தகவல் தொடர்போ அல்லது உதவியோ கிடைப்பது மிக அரிதாகி விடும்.

ஆனால் செயற்கைகோள் தகவல் தொடர்பு மூலம் எந்த இடத்திலிருந்தும் தகவல்களை பெறவும் அனுப்பவும் முடியும், அதுமட்டுமல்லாது தாக்குதல் நடக்கும் இடத்தில் நடப்பவற்றை அப்படியே தலைமை அலுவலகத்துக்கு நிகழ் நேர வீடியோவாக அனுப்பவும் முடியும். இதன் மூலம் தலைமை அலுவலகம் வேண்டிய உதவிகளையோ அல்லது தகவல்களையோ களத்தில் இருக்கும் படைகளுக்கு உடனடியாக செய்யும். அதோடு செயற்கைகோள் தகவல் பரிமாற்றத்தை எதிரிகளால் எளிதில் இடை மறிக்கவோ அல்லது ஜாம் பண்ணவோ முடியாது.

இதுவரை ராணுவம் மிக குறைந்த திறனுள்ள GSAT 6 செயற்கைக்கோளையே பயன்படுத்தி வந்தது. இதன் மூலம் வெறும் ஒலி தகவல்களை மட்டுமே அனுப்பவும் பெறவும் முடியும். இனியும் சில காலத்திற்கு அதையே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது ராணுவம்.

கூடிய விரைவில் செயலிழந்த செயற்கைகோளுக்கு மாற்றாக புதிய செயற்கை கோளை இஸ்ரோ செலுத்தும்.

இந்திய கப்பல் படை GSAT 7 செயற்கைக்கோளை தகவல் தொடர்புக்காக பயன்படுத்தி வருகிறது, சுமார் 2700 கிலோ எடை உள்ள இந்த செயற்கைக்கோளை 2013-லேயே ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்துக்கு சொந்தமான ஆரியன் ராக்கெட்டில் வைத்து அனுப்பியது, சுமார் 200 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் சுமார் 500 கோடி ரூபாய் வசூலித்தது.

அப்போதைய காலகட்டத்தில் கிரையோஜெனிக் தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லாததால் அதிக எடை உள்ள செயற்கைக்கோளை செலுத்த வெளிநாடுகளிடம் தான் கோரப்பட்டது.

தற்போது இந்தியாவிடம் கிரையோஜெனிக் தொழில்நுட்பம் உள்ளதால் சுமார் 2.5 டன் எடை வரை உள்ள செயற்கைக்கோளை இஸ்ரோ-வாலே செலுத்த முடியும்,தற்போது செலுத்தப்பட்ட GSAT 6A செயற்கைகோள் சுமார் 2200 கிலோ எடையுள்ளது.

அதோடு விமானப்படைக்கு தனியாக ஒரு செயற்கைக்கோளை தற்போது இஸ்ரோ தயாரித்து வருகிறது, இதை அடுத்த வருடம் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது, GSAT 7A என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைகோள் விமானப்படை விமானங்களோடு நேரடியாக தகவல் தொடர்பு கொண்டு அதை தரை இலக்குகளோடு பகிர பயன்படுத்தப்படும். இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்துடன் தான் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதை ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஆரியன் ராக்கெட் விண்ணில் செலுத்தும்.